திருக்குறள் பீடம் முதற்குரவர், சிவநெறிச் செஞ்சொற்கொண்டல், சித்தாந்த செஞ்ஞாயிறு

அருட்குருநாதர் அழகரடிகளார்

அழகரடிகள் (1904-1981) மதுராந்தகம் மாம்பாக்கத்தில் பிறந்த ஒரு சிறந்த தமிழ் அறிஞர், ஆசிரியர் மற்றும் திருக்குறள் பீடாதிபதி ஆவார். தமிழ் மீது ஆர்வம் கொண்டு, தனித் தமிழ் இயக்கத் தந்தை மறைமலை அடிகளிடம் தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றார்.

இயற்பெயர்

பாலசுந்தரம். மாம்பாக்கத்தில் மாணிக்கம்மாள்-சுப்புராய பிள்ளை தம்பதியருக்கு ஏப்ரல் 4, 1904-ல் பிறந்தார்.

பணி

ஆசிரியராகப் பணியாற்றியவர். பின்னர் திருக்குறள் பீடத்தின் முதற்குரவராகச் செயல்பட்டார்.

சிறப்புப் பெயர்கள்

சித்தாந்தச் செஞ்ஞாயிறு, செந்தமிழ் சிவநெறிச் செஞ்சொற்கொண்டல், அருட்குருநாதர்.

படைப்புகள்

'மறைமலையடிகளார் வரலாறு மாட்சி', 'சிவஞான சித்தியார் சொற்பொழிவு', 'இராமலிங்கர் வரலாறும், திருவருட்பா ஆராய்ச்சியும்', 'கந்தரநுபூதி - அழகரடிகளின் விரிவுரைச் சுருக்கம்', 'திருக்குறள் அறம்'.

படைப்புகள்

மறைமலையடிகளார் வரலாறு மாட்சி

சிவஞான சித்தியார் சொற்பொழிவு

திருக்குறள் அறம்

மறைமலையடிகளாரின் வரலாற்றை எழுதியதுடன், அவரது நூல்களுக்கும் உரையாசிரியர் ஆவார்.

மறைமலை அடிகள் இயற்றிய ‘திருவெற்றிமுருகர் மும்மணிக்கோவை’ என்னும் நூலுக்கு உரை எழுதினார். அந்த உரை நூலின் கருத்தைக் கண்டு மறைமலை அடிகள் வியந்து பாராட்டினார். இவருடைய இயற்பெயருக்கு ஏற்ப ‘இளவழகனார்’ என்னும் பெயர் சூட்டி மகிழ்ந்தார்.

அழகரடிகள் பற்றிய முக்கிய குறிப்புகள்

ஞாயிறுதோறும் சென்னையில் திருக்குறள் வகுப்புகள் நடத்தினார்.

ஐந்து ஆண்டுகள் மாதந்தோறும் திருமந்திர விரிவுரை நிகழ்த்தினார். இதன் நிறைவுச் சொற்பொழிவை திருவாவடுதுறை சென்று அங்குள்ள திருமூலர் சந்நிதியில் நிகழ்த்தினார். திருவாவடுதுறை அம்பலவாண பண்டாரத்தாரால் ‘திருமந்திரப் பேராசிரியர்’ என்னும் பட்டம் அளிக்கப்பட்டது. மேலும், பத்தாயிரம் வெண்பொற்காசுகளைப் பரிசாக வழங்கிப் பாராட்டினர். திருவாவடுதுறை ஆதினம் இவரது சொற்பொழிவைக் கேட்டு மகிழ்ந்து பாராட்டியதுடன், மடத்திலேயே தங்கி நூல்கள் இயற்றுமாறு கேட்டுக் கொண்டார்.

சென்னை இறைபணி மன்றத்தின் சார்பில், 1950 முதல் 1962 வரை பன்னிரெண்டு ஆண்டுகள் தொடர்ந்து ‘பெரிய புராண’ விரிவுரை செய்து பெரிய சாதனையைப் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வள்ளலார் மீது கொண்ட ஈடுபாட்டின் காரணமாக ‘இராமலிங்கர் வரலாறும், திருவருட்பா ஆராய்ச்சியும்’ என்ற நூலை வெளியிட்டார்.

‘ஒளவையார் திருவுள்ளம்’ ‘ஒளிவழிபாடு’, ‘தணிகை மலை’ ‘திருமூலர் அருள் மொழிகள்’ ‘திருக்கழுக்குன்ற மாட்சி’ ‘சொல்லரசர்’ முதலிய நூல்களை எழுதியுள்ளார்.

‘பதினெண்கீழ்க் கணக்கு’ ‘முதுமொழி “காஞ்சி” அதிவீரராமர் அறநெறி’ ‘சிவப்பிரகாசர் செந்நெறி’ ‘நாலடியார்’ முதலிய நூல்களுக்குச் சிறந்த உரை நூல்களை எழுதியுள்ளார். மெய்கண்ட நூல்கள் பதினான்கினைப் பல்லாண்டுகளாய்ப் பாடம் சொல்லி நிறைவேற்றினார். அதையொட்டி பதினான்கு நாட்கள் மெய்யுணர்வு விழா நடத்தப்பட்டது. அவ்விழாவில் ‘அழகரடிகள்’ ஆனார். திருக்குறள் பீடாதிபதியுமானார்.

தமக்குக் கிடைக்கும் பரிசுத் தொகையினையும், அன்பளிப்புகளையும் சேமித்து, மாம்பாக்கத்தில் 150 ஏக்கர் நிலத்தை வாங்கினார். ஆரம்ப நிலையிலிருந்த பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக்கினார். எளியதாக இருந்த குருகுலம் வளர்ந்து, 1960 ஆம் ஆண்டு முதல் திருக்குறள் பீடமாக உயர்ந்தது.

அழகரடிகள் தமிழக்குச் செய்த தொண்டு தமிழ்மொழி உள்ளளவும் நிலைத்து நிற்கும்!